Advertisment

தமிழிசைக்கு எதிராக விமானத்தில் முழக்கம்; தூத்துக்குடி மாணவி மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

தமிழிசைக்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட தூத்துக்குடி மாணவி; வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilisai and Sofia

தமிழிசைக்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட தூத்துக்குடி மாணவி; வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது தமிழிசைக்கு எதிராக தூத்துக்குடி விமானத்தில் முழக்கமிட்ட லூயிஸ் சோபியா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த துணை கமிஷனர் நாகஜோதி திடீர் மாற்றம்: பின்னணி என்ன?

இந்தநிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் விமானத்தில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தப்போது, மாணவி சோபியா மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. எனவே, தன் மீது வழக்கு செய்யப்பட்டதற்கு எதிராக மாணவி சோபியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

சோபியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வந்தார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. எனவே, விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன். அதைக் கேட்ட தமிழிசை சௌந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கத்தில் என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால், அவரது புகாரின்பேரில் தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சௌந்தரராஜன், தற்போது ஆளுநராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான இயக்குனர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி மனு தாக்கல் செய்ததன் பெயரில் அவர் ஒருவர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தியுள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை போலீசார் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி தனபால், மாணவி சோபியா மீது வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamilisai Soundararajan Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment