பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கறை இருந்தால் பழனி கோவிலில் தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரிச்சர்ட ரஷி, ப்ரஜின் நடிப்பில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி, அதன்பிறகு இயக்கிய திரௌபதி படத்தின் மூலம், பிரபலமானார். அடுத்து இயக்கிய ருத்ர தாண்டவம் மற்றும் பகாசூரன் ஆகிய இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரிச்சர்டு ரிஷி நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மோகன் ஜி, பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியிருந்தார். இதன் காரணமாக திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் பழனி காவல் நிலையத்தில வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், அந்த மனுவில்,
நானும் ஒரு முருக பக்தன், பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து நான் அவதூறு பரபரபவில்லை. இந்த கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான், செவி வழியாக கேள்விப்பட்டதையே பேசினேன். ஆகவே பழனி காவல் நிலையத்தில் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சமூகவத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில், கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் சமூகவலைதளங்களில் பேசியுள்ளார். ஏற்கனவே இவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய்பபட்டு தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருவதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார்.
இதை கேட்ட நீதிபதி, எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் தெரிவிக்க கூடாது. உண்மையில் பழனி கோவில் மீது அக்கரை இருந்தால், அங்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம். அல்லது 10 நாட்கள் சேவை செய்யும் வகையில் பஞ்சாமிர்தம் செய்யும் இடத்தில் பணியாற்றலாம். அதே சமயம் பழனி பஞ்சாமிரதம் குறித்து பேசிய அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில், மன்னிப்பு கோரிய விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“