இந்திய முழுவதும் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா அல்லது கழிவு நீரில் குளிக்க வருகிறார்களா? என்று ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்ககோரிய வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை நீதிபதிகள் தங்களது கருத்துக்களை காட்டமாக கூறியிருக்கிறார்கள்.
இந்த வழக்கை குறித்து நகராட்சி நிர்வாகம், நீர் வளங்கள் துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய மனுவில், "ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோயில் இருக்கிறது. அக்கோயிலை சுற்றி அறுபத்திநான்கு தீர்த்தங்கள் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.
இதில் கடல் பகுதியை அக்னி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். ராமேஸ்வர தீர்த்தத்தில் குளிப்பதற்கு இந்திய முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். ஆனால் அக்கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் என பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கோயிலின் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை அமைக்க 52.60 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதுவரை ஏழு ஆண்டுகள் ஆகியும் 50 சதவீத பணிகளே நடைபெற்று இருக்கிறது. மேலும், தற்போது எந்த பணிகளும் நடைபெறாமல் இருக்கிறது.
இதைப்பற்றி அதிகாரிகளிடம் பல்வேறு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கழிவு நீர் அகற்றப்பட வேண்டும். இதற்கான சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்", என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil