தனி நபரின் உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அதன் பேரில் விசாரணை செய்ய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், எனது கணவா் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தாா். இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், " இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவா் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஓடிபி வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவா் பதிவிறக்கம் செய்துள்ளாா். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவா் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பாா்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கை பேசிக்கும் பொருந்தும். ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“