நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தொடர்பான வழக்கில் என்னதான் நடைபெறுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தன. இவை, அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டன. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் சார்லஸ் இளையராஜா என்பவருக்கு அளித்த ஜாமினை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "நியோமேக்ஸ் வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு கால தேவைப்படும்? இந்த வழக்கு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நிதி நிறுவனத்தின் சொத்துகளை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு தாமதமாவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, அரசாணை வெளியிடுவது தொடர்பாக இனியும் கால அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகளை வழக்கில் இணைத்து அதனை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அரசாணை வெளியிட தவறும்பட்சத்தில் உள்துறை செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“