மதுரை உயர் நீதிமன்ற கிளை, பிறப்புச் சான்று மற்றும் பள்ளி கல்விச் சான்றுகள் அடிப்படையில் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை திருத்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஐயம்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவில், “என் கணவர் இன்பராஜா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அவர் கடந்த 2024 டிசம்பர் 22ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தார். குடும்ப ஓய்வூதியம் பெற நான் ஆதார் நகலை ராணுவத்திடம் சமர்ப்பித்தபோது, அதில் என் பிறந்த தேதி தவறாக 2005 மே 2 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனது உண்மையான பிறந்த தேதி 2006 மே 2 என்பதைக் கண்டறிந்தேன்,” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிறந்த தேதியை திருத்துவதற்காக டில்லியில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) ஆன்லைன் வழியாக மனு அளித்தபோது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது சட்டவிரோதம் எனக்கூறி அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தீர்ப்பளிக்கையில், “மனுதாரர் 2006 மே 2ஆம் தேதி பிறந்ததை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கல்விச்சான்றுகள் உள்ளன.
ஆதார் பதிவில் தவறான தேதி இருந்தது என்பது மனுதாரரால் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். எனவே, உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் ஆதார் விவரங்களை திருத்தி, அவருக்கு புதிய ஆதார் சான்று வழங்க வேண்டும்,” எனத் தெரிவித்தார். இதன் மூலம், ஆதார் பதிவின் பிறந்த தேதி திருத்தம் பெறும் வழிக்கான முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.