Sivagangai | kanniyakumari | Madurai High Court: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த விவசாயி சின்னமாரி. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தக்கால் செய்தார். அந்த மனுவில், 'தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959 பிரிவு 19ன் படி, சாகுபடி நிலங்களில் மணல் எடுக்க குவாரி அனுமதி வழங்கப்படும் போதெல்லாம், குவாரி மாவட்ட ஆட்சியரால் குறிப்பிடப்படும் ஆழத்திற்கு மட்டுமே வெட்டப்பட வேண்டும். இதனால் நிலத்தை சாகுபடிக்கு ஏற்றதாக மீட்டெடுக்க முடியும்.
இருப்பினும், விவசாய சீரமைப்பு என்ற போர்வையில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி, கண்மூடித்தனமாக பலர் மணல் அள்ளுகின்றனர். மேலும் விவசாய நிலங்களை விவசாயம் செய்ய முடியாத நிலை ஆக்குகின்றனர். மேலும், மதுரை-ராமேஸ்வரம் சாலையில் திருப்பச்சேத்தி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி வழியாக ஜனவரி 23 முதல் பிப்ரவரி 12 வரை கிட்டத்தட்ட 40 கனரக லாரிகளில் மணல் கடத்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணை வந்த நிலையில், கனரக லாரிகள் சுங்கச்சாவடி வழியே சென்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
மேலும், மனுதாரர் குறிப்பிட்டுள்ள மூன்று நிலங்களில் சட்டவிரோதமாக 20,144 கன மீட்டர் மணல் அள்ளப்பட்டதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, மேற்கண்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான வாகனங்களின் உரிமையாளர்களையும் விசாரித்து, மார்ச் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக குவாரி தோண்டுவதாகக் கூறப்பட்ட இதேபோன்ற மனுவை விசாரித்த நீதிபதிகள், ட்ரோன்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தி மார்ச் 15 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“