திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஹோட்டலின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அதை காலி செய்யுமாறு சுற்றுலாத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஹோட்டல் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஹோட்டலின் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தாக்கல் செய்த மனுவில், "அரசு குத்தகை காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை. அந்த ஹோட்டலை சுற்றுலா வளர்ச்சிக் கழகமே ஏற்று நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால், இந்த அரசின் முடிவை 'கும்கி' படத்தில் வரும் யானையுடன் ஒப்பிட்டு தனி நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கோயில் யானையை கும்கி யானையாகப் பயன்படுத்துவதையும், இறுதியில் கும்கி யானை இறந்துபோவதையும் சுட்டிக்காட்டி, சுற்றுலாத் துறை ஹோட்டல் நடத்த முன்வந்ததை தனி நீதிபதி விமர்சனம் செய்துள்ளார். இது சரியல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள இந்தக் கருத்துகளை நீக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர். பூர்ணிமா அமர்வு, தங்கள் தீர்ப்பில் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது: "குத்தகை உரிமம் முடிந்த பிறகு, அதை நீட்டிப்பது என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் உரிமை அல்ல. அது முழுக்க முழுக்க அரசின் முடிவுக்கு உட்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1971 முதல் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.32.33 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. எனவே, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஹோட்டல்கள் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அரசின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சுற்றுலாத் துறை ஹோட்டல்கள் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் நீக்கப்படுகின்றன. இந்த மேல்முறையீடு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்