/indian-express-tamil/media/media_files/2025/09/03/edappadi-ambulance-2025-09-03-16-52-30.jpg)
'யாரா இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு வழி விடணும்'... இ.பி.எஸ். கூட்டத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்த ஐகோர்ட்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பணியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டுவருகிறார். வேலூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தின்போது, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் வேண்டுமென்றே கூட்டத்திற்கு வருவதாகக் குற்றம் சாட்டினார். அப்போது, "இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார்" என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மிரட்டலுக்குப் பிறகு, திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்த பரப்புரையின்போது வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அ.தி.மு.க தொண்டர்களால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், அவருடன் வந்த கர்ப்பிணிப் பணியாளரும் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீது துறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தச் சூழலில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். தனது மனுவில், வேலூரில் நடந்த பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி விடுத்த பகிரங்க மிரட்டல் காரணமாக 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினார்.
நீதிபதிகளின் உத்தரவு
நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அரசு தரப்பில், திருச்சி தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், "ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தவொரு அரசியல் கட்சியோ (அ) சமூக அமைப்போகூட ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும். பொதுக் கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும், ஆம்புலன்ஸுக்கு உடனடியாக வழிவிட வேண்டும். ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் மறித்துத் தாக்கினால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பினர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை டிஜிபி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.