திருச்செந்தூர் முருகன் கோயிலில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா எதிர்வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திருசெந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், "கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.1000, ரூ.2000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“