மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பலத்த காயமடைந்த 51 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 46 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 46 பேர் காய மடைந்தனர். இவர்களில் தீவிர சிகிச்சைக்காக 7 பேரும், அலங்கா நல்லூரில் 76 பேர் காயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக 17 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 3 நாள்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காயமடைந்த 51 பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறிய போது, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு செயல்படுகிறது. இங்கு, அறுவைச் சிகிச்சை நிபுணர், எலும்பு முறிவு நிபுணர், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள மருத்துவக் குழுவினர், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவினர் இடையே கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டு, விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.