மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா என்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
பின்னர் அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடத்தில், தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (28-ந் தேதி) மாலை 6.15 மணியளவில் மதுரைக்குப் புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டர். இந்த வழிபாட்டில் பங்கேற்க மதுரை வைகை ஆற்றுக்குள் நள்ளிரவு முதல் மக்கள் திரண்டிருந்தனர்.
பச்சை நிற பட்டாடை உடுத்தி, தங்கக் குதிரை ரதத்தில் ஊர்வலமாக வந்து அதிகாலை மக்களுக்குத் தரிசனம் அளித்தார். பின்னர் காலை 6 மணி அளவில் வைகை ஆற்றிற்கு வந்தடைந்த சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகர், ஆற்றில் இறங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ-க்கள் என ஆகிய அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டது. கள்ளழகரைக் காண தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து மக்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.