மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் செல்லத் துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மதுரையை சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் சீனிவாசன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ள செல்லத் துரை உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் செல்லத் துரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், துணைவேந்தரை நியமிக்க அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் மூன்றில் 2 பேர் செல்லத் துரையை பரிந்துரைக்காத நிலையில் அவரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் அமர்வு துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் புதிய தேடுதல் குழுவை அமைத்து மீண்டும் துணைவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதேபோல, இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற செல்லத் துரையின் கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.