மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 21 மணி நேரத்திற்குள் மென்பொறியாளர் ஒருவர் இறந்துள்ளார்.
கொரோனா நோய்தொற்றை தடுக்கும் விதமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஒருவர், தடுப்பூசி எடுத்துக் கொண்ட 21 மணி நேரத்திற்குள் இறந்துள்ளார்.
உயிரிழந்தவர் மதுரை அருகே நியூ விலங்குடியைச் சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் ஆவர். இவர் இங்கிலாந்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சைமன் கடந்த ஆகஸ்ட் மாதம் தன் சொந்த ஊருக்கு திரும்பி வந்து, அங்கு வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்துள்ளார்.
சைமன் பின்னர் சைமன் இங்கிலாந்து நிறுவன வேலையை விட்டுவிட்டு, கடந்த நான்கு மாதங்களாக பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் சைமன் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், சமயநல்லூர் தொகுதி, சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டனர்.
தடுப்பூசி எடுத்துக் கொண்ட அவர்கள் இருவருக்கும் இரவில் உடல் வலி இருந்துள்ளது. உடல் வலி காரணமாக சைமன் இரவில் அவதிப்பட்டுள்ளார். ஆனால் காலையில் சாதாரணமாக எழுந்துள்ளார். குளியலறையில் இருந்தபோது, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலை 8.30 மணியளவில் கீழே விழுந்துள்ளார்.
உறவினர்கள் சைமனை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் ஜி.ஆர்.எச். க்கு கொண்டு செல்லப்பட்டார். மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் சைமன், ஜி.ஆர்.ஹெச் இன் சூப்பர்ஸ்பெஷாலிட்டி பிளாக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் காலை 10.45 மணியளவில் இறந்துவிட்டார்.
தடுப்பூசி எடுத்து பின்னர் காத்திருப்பு மையத்தில் சைமனை கண்காணித்தபோது, அவருக்கு தடுப்பூசியால் உடனடி ஒவ்வாமை ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி டாக்டர் கே.வி.அர்ஜுன்குமார் தெரிவித்துள்ளார்.
சைமன் கடந்த ஆறு மாதங்களாக நீரிழிவு நோயாளியாக இருந்திருக்கிறார், ஆனால் அவர் அதற்காக சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் சைமனுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் அல்லது காசநோய் அல்லது மருந்துகள் மற்றும் உணவுக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் எதுவுமில்லை. மேலும் சைமனுக்கு புகை மற்றும் மதுப்பழக்கமும் இல்லை. என்று டாக்டர் அர்ஜூன்குமார் கூறினார்.
சைமன் இறந்ததைத் தொடர்ந்து, கூடல்புதூர் காவல்துறையினரால் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.ஆர்.எச். சில் சைமனின் பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர், அவரது உடல் நாகமலை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையின் போது எந்த மேக்ரோஸ்கோபிக் கண்டுபிடிப்பும் இல்லை. மேலும், உள்ளுறுப்புகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தடுப்பூசிக்குப் பிறகான பாதிப்புகள் லேசான, மிதமான மற்றும் தீவிரமான மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இறந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை. கோவிஷீல்ட் தடுப்பூசியிலும் இதுவரை பெரிய பாதிப்புகள் இல்லை. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil