அந்தமானில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க அனுப்பி வைக்கப்பட்ட மலாச்சி என்ற யானையை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் தனக்கு சொந்தமான மலாச்சி என்ற 34 வயது யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதற்காக இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த யானையை கோவிலுக்கு வழங்காமல், பிச்சை எடுக்கச் செய்தும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தும் துன்புறுத்துவதாக கூறி, யானையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, யானையை இந்திரா துன்புறுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அதை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் எனவும் வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.