காலை 11.30:”வீரவசந்தராயர் மண்டபத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள சில தூண்கள் கீழே விழுந்துள்ளன. பிற இடங்கள் பாதுகாப்பாக உள்ளன. பக்தர்கள் எந்த விதமான இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 36 கடைகள் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளன. தீ முழுமையாக அணைக்கப்பட்டது”, என மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் தெரிவித்தார்.
காலை 8.15: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த சாலை தவிர்த்து பிற சாலைகள் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சேதமாகின.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் நேற்றிரவு பூஜைகள் நடைபெற்று வழக்கம்போல் நடை சாத்தப்பட்டு வெளிக்கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், கிழக்கு கோபுரம் அருகே ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. அங்கிருந்த பிளாஸ்டிக் மற்றும் விளையாட்டு பொருட்கள் கடையில் பற்றிய தீ, சற்று நேரத்தில் மற்ற கடைகளுக்கும் பரவியது.
இதையடுத்து, தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றும் மரச்சாமான்கள் அதிகளவில் இருந்ததாலும், குறுகிய இடத்தில் தீப்பிடித்ததாலும், தீயை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர்.
மண்டபத்தின் ஒரு பகுதியில் தீயை அணைக்க முயன்றபோது, மற்றொரு பகுதி வழியாக தீ பரவியதால், வடக்குப் பிரகாரம் வழியாகவும் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டபோதும், 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமாகின. தீயின் வெப்பம் காரணமாக, ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரைகளில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டன.
விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அகர்வால் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உடனடி நடவடிக்கைக் காரணமாக, தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தீ விபத்துக் குறித்து தகவலறிந்ததும் திரளான மக்கள் கோவில் முன்பு கூடத் தொடங்கினர். நூற்றுக்கணக்கில் அங்கு குவிந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தை இன்று பார்வையிட உள்ளதாக அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.