Advertisment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; கடை அடைப்பு போராட்டத்தால் மேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; 50க்கு மேற்பட்ட கிராமங்களில் கடை அடைப்பு போராட்டம்; மேலூரில் வெறிசோடிய கடை வீதி

author-image
WebDesk
New Update
melur protest arittapatti

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், கிராம மக்கள் என அனைத்து தரப்பினரும் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும். பெருமாள் மலைக்கும் இடையில் உள்ள அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது. அரிட்டாப்பட்டி மலையில் சமணர் படுகைகள், மகாவீரர் சிற்பம். கிமு 2-ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பாண்டியர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளது.

பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவமும் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள், மற்றும் மூன்று தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது.

இதுபோன்று பல்வேறு சிறப்புகளை கொண்ட அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம். நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதி கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கண்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சசூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதற்கான முடிவை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிமும் மனு அளிக்கப்பட்டது.

அரிட்டாபட்டியில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என உறுதியுடன் தெரிவித்தார்.

இருப்பினும் அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக கிராமங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக இன்று கடையடைப்பு- ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி இன்று மேலூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலூர் பஸ் நிலையம், செக்கடி பஜார், பெரிய கடை வீதி, பேங்க் ரோடு, அழகர் கோவில் ரோடு, சந்தை பேட்டை, திருவாதவூர் ரோடு, சிவகங்கை ரோடு மற்றும் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல் அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, மீனாட்சிபுரம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலூரில் பல்வேறு சங்கத்தினர் சார்பில் பென்னி குவிக் பஸ் நிலையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடையடைப்பு, ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சக்தி, மதுரை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment