மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில், சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்நிலையில், மதுரையில் இத்திட்டம் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, ''மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் எடுக்கும் முறையில் பல்வேறு கிராமங்கள் வருகிறது.
சர்வே, குடிநீர் குழாய், நெடுஞ்சாலை, பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிள்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவேண்டும்.
மாவட்டம், மாநகராட்சி, காவல்துறை நிர்வாகங்கள் இணைந்து, வழித்தடம் பகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி நிலங்களை எடுக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தோப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில்களை நிறுத்த டிப்போ அமைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம், மதுரை ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய மூன்று சந்திப்புகளை இணைக்கும் வகையில் ஒரு ரயில் நிறுத்தம் அமைக்க வாய்ப்புள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வே எடுக்கும் பணிகளை ஏப்ரல் 21-இல் தொடங்கவுள்ளனர்.
மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தபின், அடுத்த 3 ஆண்டில் மதுரை விமான நிலையத்தை இணைப்பது போன்ற விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்'' என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil