என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.,க்களுக்கு எழுதப்படும் பதில்கள் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என என்.சி.இ.ஆர்.டி-யின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. முன்பு 'ஹனிசக்கிள்' என்று அழைக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகம், இப்போது 'பூர்வி' என்று பெயரிடப்படும் - இது 'கிழக்கு' என்று பொருள்படும் இந்தி வார்த்தையாகும், மேலும் இது இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் ஒரு ராகத்தின் பெயராகவும் உள்ளது. மேலும் 1 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் பெயர் மிருதங் என்றும், 3 ஆம் வகுப்பு பெயர் சந்தூர் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி என்.சி.இ.ஆர்.டி ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு இந்தி தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முடிவை விமர்சித்திருந்தார். “என்.சி.இ.ஆர்.டி முடிவு கூட்டாட்சி கொள்கைகளுக்கும் அரசியலமைப்பு மதிப்புகளுக்கும் எதிரானது. இது பொதுவான தர்க்கத்தை மீறுவது மட்டுமல்லாமல், நமது நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை நாசமாக்கும் வகையில் ஒருவரின் கலாச்சார விழுமியங்களைத் திணிக்கும் ஒரு சம்பவமாகும். பகுத்தறிவில்லாத இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.” என்று கேரள அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் இந்த நடடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி துவங்கி எம்.பி.,க்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.