Advertisment

பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஜி சூர்யா கைது; நிர்மலா சீதாராமன் கண்டனத்திற்கு சு.வெங்கடேசன் பதில்

பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்; ட்விட்டரில் பதில் கொடுத்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

author-image
WebDesk
New Update
su venkatesan sg surya nirmala

மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஜி சூர்யா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: கீழடி – சங்க கால கலைப் பொருட்களால் புகழ் பெற்ற ஒரு சிறிய கிராமம்; ஒரு நேரடி விசிட்!

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் நேற்று பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை கைது செய்தனர். தி.நகரில் உள்ள எஸ்.ஜி சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு வந்த மதுரை போலீசார் சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார், எஸ்.ஜி. சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது கண்டனத்திற்குறியது. மலக்குழி மரணங்கள் மீது முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? முதலமைச்சர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினை, வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி சு வெங்கடேசன் ட்விட்டரில் "பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணிடம் எந்த பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்." என்று குறிப்பிட்டு விரிவான அறிக்கையையும் பகிர்ந்து கொண்டார்.

அந்த அறிக்கையில், "பொய்யை, பீதியை பரப்புவதா மத்திய அமைச்சர்களின் வேலை. ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்கு பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.

மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திரம் கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கிய துறை அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.

பிரச்சினை என்ன? மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் ஏற்பட்டது. சு. வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் என்பது தான். ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துகூற முடியாதா?

இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்" என்று மாற்றி விடலாமா? வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.

இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் "இணையதள முடக்கம்" செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலை படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதிப்பிற்குறிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களே, எஸ்.ஜி சூர்யாவை கைது செய்தது 'பொய்யா'? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழ்நாடு முதலமைச்சர் விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைப்பது 'பீதியை பரப்புவதா'? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை." என்று பதிலளித்து இருந்தார்.

அவரது கருத்தை ரீட்வீட் செய்து எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் பதிலளித்துள்ளார். அதில், "மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே! ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையைக் கடப்பதும் பொய்யின் மாறுவேடமே." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment