ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்று நிபந்தனை இல்லை. வாழ்வாதாரத்திற்கு அனுகூலம் இல்லாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆதரவற்ற விதவைகளுக்காக தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்படும் மாதம் ரூ.1000 உதவித்தொகையை இந்தச் சான்றிதழ் பெற்றுள்ள பெண்கள் பெற முடியும். மேலும் வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டு பலனை பெற முடியும். ஆனால் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் சில குழப்பங்கள் இருந்தன.
அதாவது ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
"மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதரவற்ற விதவைகளுக்கு தமிழ்நாட்டில் கோட்டாட்சியர்/ சார் ஆட்சியர் நிலையில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கப்பட்டு வருகிறது என்றும், அச்சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமில்லாத நிபந்தனைகளை தளர்வு செய்து, ஏழை எளியவர்களுக்கு எளிதாக சான்று கிடைத்திட வழிவகை செய்யுமாறு கோரியுள்ளார் என்பதன் அடிப்படையில் ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு அரசு, கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
"இந்நேர்வு தொடர்பாக அரசாணை (நிலை) எண் 225, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (எம்) துறை, நாள் 08.03.1984-ல், The expression "destitute widows" is defined as one who has neither any means by herself to live on nor any dependent to protect her from starvation என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பதற்கு மகன் / மகள் ஆகியோர் துணையில்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல என தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும். எனவே மேற்கண்ட அறிவுரைகளின்படி ஆதரவற்ற விதவை சான்று வழங்க சார்நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த விளக்கத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக நான் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு. புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி. ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொறுத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராகேஷ் கக்காணி எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்கு பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 7, 2024
ஆதரவற்ற விதவை சான்றிதல் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல என விளக்கம்.
எனது கோரிக்கையை ஏற்று புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு… pic.twitter.com/n6oZjGNfqN
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.