Advertisment

அரசுப் பள்ளிக்கு ரூ. 4 கோடி நிலம் வழங்கிய மதுரை மூதாட்டி: சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு

மதுரையில் அரசுப் பள்ளிக்கு தங்களுடைய ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியை நேரில் சந்தித்து எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Madurai MP Su Venkatesan thanks Woman donated land worth 4cr to Govt school Tamil News

ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Su. Venkatesan: மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் வங்கி ஊழியரான பூரணம்.

Advertisment

கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதை கேள்விப்பட்ட வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தார். அதனையொட்டி அதற்கான பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமையாசிரியர் சம்பூர்ணம் முன்னிலையில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் பேசுகையில், “நான் பிறந்தது கொடிக்குளம். அப்பா எனக்கு வழங்கியது ஒன்றரை ஏக்கர் நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கி ஊழியர். எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் 31 ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார். எனது மகளை பி.காம் வரை படிக்க வைத்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். குடும்பப் பிரச்சினையால் எனது மகள் இறந்தபோது நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்யுமாறு கூறினார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன்.

எனது மகள் இறந்தபோது யாருக்காக வாழ்வது என நினைத்தேன். அவர் சொன்னதுபோல் தான, தர்மங்கள் செய்யவே வாழ்ந்து வருகிறேன். கடந்த 1998-ல் எனது சகோதரருக்காக ஒரு கிட்னியும் வழங்கி ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவருகிறேன். எனது மகள் சொன்னபடி கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளேன். இதன் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன். வெளியில் தெரியாமல் பல தர்ம காரியங்கள் செய்துவருகிறேன்" என்று கூறியிருந்தார். 

நன்றி தெரிவித்த எம்.பி. 

Madurai MP Su Venkatesan thanks Woman donated land worth 4cr to Govt school Tamil News

இந்நிலையில், மதுரையில் அரசுப் பள்ளிக்கு தங்களுடைய ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியை நேரில் சந்தித்து எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- 

ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது! 

சு. வெங்கடேசன் எம்.பி, நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடனையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் திரு. இராஜேந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.

இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும். நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்!

இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்.உடன் கனரா வங்கியின் வட்டார மேலாளர் சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்.

என்று எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Su. Venkatesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment