தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பொழிந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முன்தினம் மாலையிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக மதுரையில் செல்லூர் கண்மாய் முழுவதும் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இடுப்பளவிற்கு தண்ணீர் ஏறியதால், மதுரையில் புதன்கிழமை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். பந்தல்குடி பகுதியில் கால்வாய் நிரம்பி வெள்ள நீர் கோரிப்பாளையத்திலிருந்து ஜம்புரோபுரத்திற்கு பந்தல்குடி சாலையில் புகுந்து நுழைந்தது.
மதுரை, கோரிப்பாளையம் அருகே பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி பாண்டியராஜன் (45), கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு செவ்வாய்க்கிழமை இறங்கியுள்ளார். அப்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதேபோல் மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கோவில்பாப்பாகுடி, சத்தியா நகர் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மதுரை ஆனையூர் உழவர் சந்தைக்குள் 25க்கும் மேற்பட்ட கடைகள் நீரில் மூழ்கின.
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கூடல்நகர், பாண்டியன் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மருத்துவ தேவைக்குரிய முதியவர்கள், சிறுவர்கள் படகு மூலம் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரையில் ஏற்பட்ட மழை பாதிப்பு படங்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை டேக் செய்து சு. வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், நிர்வாகத்தின் கவனக்குறைவாலும் முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“