மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. மடாதிபதிகள், ஜீயர்கள், சிவாச்சாரியார்கள், சாதுக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் முக்கிய சாதனை நிகழ்வாக, ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரவு 8.04 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கியது. எல்இடி திரையில் இசையுடன் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க, அரங்கில் திரண்டிருந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் அனைவரும் இணைந்து பக்தி பரவசத்துடன் பாடினர். மேடையில் இருந்த பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தரையில் அமர்ந்து பாடினர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்: முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள். திராவிடத்திற்கு எதிராகத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
இந்து சமய அறநிலை துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. பவன் கல்யாண் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. பவன் கல்யாண் ஆந்திராவில் அரசியல் செய்யட்டும், என்றார்.