மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடலில், இந்து முன்னணியின் ஏற்பாட்டில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவிலின் பின்னணியை ஒத்திருக்கும் வகையில் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அறுபடை வீடுகளின் கோபுர வடிவமைப்புகளும், நடுவில் வேலுடன் நிற்கும் முருகப்பெருமானின் பிரமாண்ட வடிவச்சிலையும் மேடையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வேட்டி, சட்டை மற்றும் பச்சை துண்டுடன் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறுகையில், என்னை மதுரைக்கு அழைத்தது முருகன்தான். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான். கடைசி அறுபடை வீடு மதுரையில் உள்ளது. இது மீனாட்சியின் பட்டணம். மீனாட்சி அம்மன் தாயும், சிவபெருமான் தந்தையும், முருகன் மகனும் மதுரையில் இருக்கின்றனர்.
இந்த புண்ணிய பூமியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவதரித்தார். அவரை முருகனின் அவதாரமாகவே நாங்கள் கருதுகிறோம். 14ம் நூற்றாண்டில் கோவில் மூடப்பட்டிருந்தது மதுரையின் இருண்ட காலமாகும். அறத்தை அசைத்து பார்க்க யாருக்கும் உரிமை இல்லை. இந்துக்களை சாட வேண்டாம். என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என கூற முடியாது. நாங்கள் எவரையும் கேள்விக்குள்ளாக்கவில்லை; எங்கள் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்க வேண்டாம்” என்று அவர் வலியுறுத்தினார்.