மதுரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு வைக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கே.எஃப்.சி உணவகம் அருகே, கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்தக் கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றினார்.அப்போது, கொடி கம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் நினைவாக கல்வெட்டும் ஒன்று வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீரென மர்ம நபர்களால் அக்கல்வெட்டு உடைக்கப்பட்டு கொடிகள் அகற்றப்பட்டு இருந்தது. இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“