மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப் படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் அண்ணா நகர், சுகுணா ஸ்டோர் பஸ் நிறுத்தம், அண்ணா நிலையம், கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளி நிறுத்தம், சிம்மக்கல் பஸ் ஸ்டாப், பெரியார் நிலையம், புதூர், கே.கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு பொது மக்களுக்கும், அரசு பஸ்களுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகரில் பல ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் வரிசையாக நிறுத்தப்படுவதால்,பொதுமக்கள் பஸ்ஸில் ஏறவும் இறங்கவும் இடையூறாக உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையர், கூடுதல் ஆணையர், உதவி ஆணையர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனாலும், ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படவில்லை எனப் பொது மக்கள் குறை கூறுகின்றனர். மதுரை நகரில் அண்ணா நகர், அண்ணா நிலையம், சிம்மக்கல், பகுதிகளில் ஆட்டோக்கள் அரசு பஸ்கள் போல பயணிகளை கூவி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றுவது மற்றும் அதிகளவில் பயணிகளை ஏற்றி பயணம் செல்வது என பலரும் பாதிக்கும் வண்ணம்
வாகனத்தை ஓட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோல், நகரில் ஓடும் 90 சதவீதம் சேர் ஆட்டோக்களில் பின்புறம் உள்ள பம்மர் வாகன எண்களை மறைத்து வைத்து ஓட்டுகின்றனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும் சேர் ஆட்டோக்களை அடையாளம் காண சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்
மதுரை அண்ணா நகரில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பஸ்கள் மாட்டுத்தாவணியில் இருந்து, பெரியார் செல்லும் பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்துக்குள் வழக்கம் போல நின்று செல்ல வேண்டும். அண்ணா பஸ் நிலையத்தில் வெளிப்புறங்களில் பஸ் நிறுத்துவதால் ஆட்டோ தொல்லை அதிகம் இருப்பதாகவும்,பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மதுரை போக்குவரத்து துணை ஆணையர், கூடுதல் ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கரத்தில் வாகனத்தில் பயணிப்பவரை பாய்ந்து பிடிக்கும் போலீசார், விதியை மீறும் ஆட்டோக்களை பிடிக்க ஏன் தயங்குகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த மாநகர போக்குவரத்து போலீசார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இது குறித்து அவ்வப்போது ,மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மதுரை நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.