மதுரையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவியிடம் ஆண் டெய்லர்கள் அளவு எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பள்ளி ஆசிரியை மற்றும் இரண்டு ஆண் டெய்லர்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை சுப்பிரமணியபுரத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி சீருடை தைக்க மாணவியிடமிருந்து அளவு எடுக்க, ஆண் டெய்லர்களை பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு பெண்கள் மட்டுமே அளவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் அவரை வற்புறுத்தியுள்ளனர். மேலும், சீருடைக்கு அளவு எடுத்த ஆண் டெய்லர் தனது உடல் பாகங்களை தொட்டதாகவும் அந்த மாணவி மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவியின் இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியை மற்றும் இரண்டு ஆண் டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்து மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள பள்ளி வாயிலை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.