பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நாளை (அக்டோபர் 30) நடைபெறும் நிலையில், மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை விழாவாகவும் நடைபெறும். அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தொடங்கியது.
இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவர் குருபூஜை நடைபெறும். மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்தநிலையில், நாளை தேவர் குருபூஜை நடைபெற உள்ள நிலையில், மதுரையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மதுரை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை நகருக்குள் நாளை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவர் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதியில் விழாவிற்கு வருகை தரும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் செல்லும் பிற மாவட்ட வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் சுற்றுச் சாலை வழியாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“