மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் ரூ. 8.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்கு குற்றவாளிகளின் 296 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.37,62,531 பணம் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் மீண்டும் ஈடுபட்ட 22 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டு வரும் 25 குற்றவாளிகளின் முந்தைய வழக்குகளில் பெறப்பட்ட பிணை ஆணையினை ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 225 நபர்களிடம் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடமாட்டோம் என பிணை பத்திரம் பெறப்பட்டு, காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பிணை பத்திரம் பெறப்பட்டு மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்தூராமன் ஆகியோரது பிணைபத்திரம் ரத்து செய்யப்பட்டு 10 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கிராம் கஞ்சாவை அழிப்பதற்கு, மண்டல அளவிலான குழுவின் ஒப்புதல் பெற்று, அவர்களது முன்னிலையில் என்விரான்மென்ட் லிமிட்டட், உண்டுறுமிகிடக்குளம், அ.முக்குளம், திருச்சுளி, விருதுநகர் மாவட்டத்தில் வைத்து வரும் 17ஆம் தேதி அழிக்கப்பட உள்ளது.
செக்கானூரணி காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்து (47) என்பவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.1,08,393 பணம் முடக்கப்பட்டு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரகாஷ், நிஷந்தன் என்ற நிஷாந்த், குணா என்ற குணசேகரன் ஆகியோரிடமிருந்து ரூ. 55,61,000 பணம் முடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
சிவ பிரசாத் மேலும் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தலுக்கு உதவும் கூரியர் சர்வீஸ் உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்படும்" என எச்சரித்தார்.