மதுரை சொத்துவரி ஊழல்: ஸ்டாலின் மீது இ.பி.எஸ் தாக்கு; சி.பி.ஐ. விசாரணை கோரும் அன்புமணி

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில்தான் திமுக அரசு ஆர்வம் காட்டுவதாக அன்புமணி கூறி உள்ளார்.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில்தான் திமுக அரசு ஆர்வம் காட்டுவதாக அன்புமணி கூறி உள்ளார்.

author-image
WebDesk
New Update
eps anbumani

மதுரை சொத்துவரி ஊழல்: ஸ்டாலின் மீது இ.பி.எஸ் தாக்கு; சி.பி.ஐ. விசாரணை கோரும் அன்புமணி

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியாக மாறி விட்டது. 'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்ற அரசு வாக்குறுதி, தற்போது குடும்ப ஆதிக்கத்தால் சீரழிந்துள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் வந்ததும், சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் மற்றும் குப்பை வரி ஆகிய அனைத்தும் பலமடங்கு உயர்த்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு வரி வசூலிக்கப்பட்டபோதிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்றார்.

சமீபத்தில், மதுரை மாநகராட்சியில் இடம்பெற்ற சொத்துவரி ஊழல் விவகாரத்தில் முன்னாள் உதவிக் கமிஷனர் மற்றும் மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள், "மண்டலத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் அறிவுறுத்தலின்பேரில்தான் சொத்துவரி குறைத்தோம்" என வாக்குமூலம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் வெடித்தபிறகு, சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத்தலைவர்களை ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வைத்ததாகவும், இதுவும் குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கை என்றும் பழனிசாமி விமர்சித்துள்ளார். இவ்வாறு மதுரை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், கோவை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் மேயர்கள் ராஜிநாமா செய்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

"உள்ளாட்சிப் பதவிகள் மக்கள் நலனுக்காக அல்ல, குடும்ப ஆதிக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன" என்ற நம்பிக்கையுடன் மக்கள் அரசை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளனர். 2026 தேர்தலில் தி.மு.க. அரசுக்கு மக்கள் தக்கப் பதிலை தருவார்கள் என்றும், அப்போது ஆட்சி அமைக்கும் அ.தி.மு.க., ஊழல் செய்தவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment
Advertisements

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்து வரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு, அதை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. 

மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார். இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில் தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு, பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும். 

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: