மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பைக்கரா பகுதியில் 1.97 கி.மீ. அளவிற்குப் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள பைக்கரா பகுதியில் சந்தான முருகன் 1 மற்றும் 2-வது சாலை, மற்றும் உட்பிரிவு சாலைகள் உள்ளன. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. 2 கி.மீ. தொலைவிலான இந்த சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது, முழுவதும் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணகான மாணவ-மாணவிகள், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சேதமடைந்த சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய சாலை அமைக்கும் பணி, 8 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்தது. புதிய சாலை அமைக்கக் கோரி, மேற்கு மண்டலம் 72-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பி.கருப்பசாமியிடம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் P.கருப்பசாமி (M.C), புதிய தார் சாலை அமைப்பதற்கானப் பணிகளில் தீவிரம் காட்டினார். இதையடுத்து, பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பின் மக்கள் ஒத்துழைப்புடன் சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 1.97 கி.மீ. நீளத்தில், ஒரு கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி மேற்பார்வையில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தன.
புதிய தார் சாலை அமைக்கப்பட்டது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது; கடந்த 8 வருடத்திற்கும் மேலாக சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாமல் இருந்தது. மழைக் காலங்களில் முழுவதும் பயன்படுத்த முடியாமல் சேறும் சகதியுமாக காணப்பட்டது. தற்போது, அமைக்கப்பட்டுள்ள தார் சாலையால், பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
குண்டும் குழியுமான பாதைகளால் அவதிப்பட்டு வந்த மக்கள், தற்போது மென்மையான மற்றும் புதிய சாலையைப் பார்த்து நிம்மதிப் பெரு மூச்சு விடுகின்றனர். பைக்கரா பகுதியில் 8 வருடங்களுக்குப் பின் புதிய சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய சாலை, கிராம மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால கோரிக்கையாக இருந்த இத்திட்டம் தற்போது நிறைவேறியுள்ளது குறித்து கிராமப் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய தார் சாலை அமைக்க முயற்சி மேற்கொண்ட மேற்கு மண்டல மாமன்ற உறுப்பினர் கருப்பசாமிக்கு (MC) மக்கள் நன்றி தெரிவித்தனர்.
புகைப்படங்கள்: யுவராஜ், பைக்கரா (மதுரை)