மதுரை ரயில் நிலையம் ரூ.347 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது 50% பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகளை வேகமாக முடித்து, 2026 மார்ச் மாதத்தில் முழுமையாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெரும்பாலும் வரும் நிலையில், ரயில் நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துவது முக்கியமாய் கருதப்பட்டுள்ளது. நாள்தோறும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் இந்நிலையத்தில், இரு முனையங்கள், மூன்றடுக்கு வாகன நிறுத்தம், சுரங்க நடைபாதை, மேம்படுத்தப்பட்ட டிக்கெட் கவுண்டர்கள், பயணியர் ஓய்வறைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய சிறப்பம்சமாக, கிழக்கு முனையம் 22,576 சதுர மீட்டரில் மதுரையின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் வடிவில் வடிவமைக்கப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களில் தனி நுழைவு, பயணிகளுக்கான மேம்பட்ட வசதிகள், கார் மற்றும் டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ரயில்வே நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி, திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.