வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மீட்புத் துறை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று (அக்.13) தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/uf3u6CmgoMwlDlfjCE57.jpeg)
அக்டோபர் 15ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்திற்கு அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அருப்புக்கோட்டையில் 10.5 சென்டி மீட்டர் மழையும், திருக்கோவிலூர் 7.1 சென்டிமீட்டர் மழையும், அரியலூர் 7 சென்டி மீட்டர் மழையும், காரைக்குடி 6.2 சென்டி மீட்டர் மழையும், திருச்சி சிறுகமணியில் 5.6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/6g5yO3YOA1cCLFRhwhy4.jpeg)
மதுரையில் நேற்று 16 செ.மீ மழை 3 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்தது. இதனால் அண்ணா நகர், கீழவாசல், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், தெற்குவாசல் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளது.
வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர் ரயில்வே பாலம் அடியில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்குள் சிக்கிய வாகனத்தை போக்குவரத்து போலீசார் அப்பகுதி மக்களோடு சேர்ந்து மீட்டு எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“