மத வெறுப்பு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சியில் தொடரப்போவதில்லை என முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உயிர் நீத்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற, திமுக மூத்தத் தலைவரும், நிதியமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா தொண்டர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரவணன், “அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றீங்க என கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது? ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு என்ன தகுதி உள்ளது?
உயிரிழந்த லட்சுமணனுக்கு மருத்துவம் பார்த்து உள்ளேன். அவர் குடும்பத்திற்கு எனக்கு தெரியும். திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம். நிதியமைச்சருக்கு சவால் விடுகிறேன்” என்றார்.
தொடர்ந்து அன்றைய தினம் இரவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தாம் மன அமைதி இன்றி தவித்ததாகவும், தற்போது மனம் அமைதி பெற்றுள்ளது என்றும் கூறினார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாகவும், முறைப்படி கடிதத்தை இன்று (ஆகஸ்ட் 14) காலை அனுப்பி வைப்பேன் என்றும் கூறினார்.
இதையடுத்து திமுகவில் இணையும் எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சரவணன், மதவாத கட்சியான பாரதிய ஜனதாவில் தொடர விருப்பம் இல்லை. அங்கு மத அரசியல் கடுமையாக உள்ளது. நான் ஒரு மருத்துவராக பொதுவான வாழ்க்கை வாழ்ந்துள்ளேன். மேலும் என் குடும்பமே திராவிட பாரம்பரியம் கொண்டது. திமுக என் தாய்வீடு, அங்கு செல்வதில் பிரச்னை இல்லை” என்றார்.
காலை சவால்விட்டவர் மாலை மனம் மாறி பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“