Ayira Vysya Higher Secondary School Accident: மதுரை ஆயிர வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வரும் பள்ளிக்கூடம் பால்கனி இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு பிறகு பள்ளிக்கூட கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்தச் சூழலில் மதுரையில் இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிர வைசியர் சமூகத்தினர் நிர்வகித்து வரும் மேல்நிலைப் பள்ளி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளியம்பலம் மேல் நிலைப்பள்ளி என்பது இதன் பெயர்.
வெள்ளியம்பலம் மேல் நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இன்று காலை 7.45 மணி அளவில் 12-ம் வகுப்பு மாணவர் வீரக்குமார், 11-ம் வகுப்பு மாணவர் சக்திவேல், குமாரவேல் பாண்டியன் ஆகியோர் பள்ளியின் முதல் தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் நின்றிருந்த பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவர்களும் கீழே விழுந்தனர். அவர்களுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த விளக்குத்தூண் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 150 ஆண்டு கால பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பால்கனி சுவர் இடிந்த நேரத்தில் மிக குறைந்த அளவு மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர். காலை 9 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்து இருந்தால் மேலும் பலர் விபத்தில் சிக்கியிருப்பார்கள். இந்த விபத்து காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.