மதுரையை தமிழகத்தின் 2-ம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சு பெரிய விவாதமாக மாறியுள்ளது. உண்மையில் மதுரை 2-ம் தலைநகர் கோரிக்கைய சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தற்போது தமிழகத்தின் தலைநகராக இருந்து வருகிறது. மிகப் பரந்த மாநிலமான தமிழகத்தில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அனுகுவதற்கு மாநிலத்தின் தென் கோடியில் இருப்பவர்கள் சென்னை வரவேண்டும் என்றால் கிட்டத்தட்ட 16-17 மணி நேரம் பயணித்து வர வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்தின் தலைநகர் மாநிலத்தின் மத்தியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எழுந்து வந்துள்ளன.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் மத்திய மண்டலம் என்று அழைக்கப்படும் திருச்சியை தலைநகராக்க முயற்சிகள் நடந்ததை இப்போதும் அரசியல் தலைவர்கள் திருச்சி பிரமுகர்கள் நினைவுகூர்கின்றனர்.
பொதுவாக தலைநகர் மாற்றம் என்பது வரலாற்றில் நடந்து நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. சோழர்கள் காலத்திலும் முகலாயர்கள் காலத்திலும் வரலாற்றில் தலைநகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது. நவீன வரலாற்றில் கூட ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவில் இருந்து தலைநகரை டெல்லிக்கு மாற்றியது என்பது அண்மைக் கால வரலாறாக உள்ளது.
அந்த வகையில், தமிழகத்திலும் மக்களுடைய வசதிக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் அதிகாரப் பரவலுக்காகவும் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்றும் தமிழகத்துக்கு 2வது தலைநகர் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்துள்ளன.
ஆந்திரப் பிரதேசத்திலும் இப்போது 3 தலைநகரங்கள் வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையை தமிழகத்தின் 2-ம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அமைச்சரின் 2-ம் தலைநகர் கோரிக்கை அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து விவாதமாகியுள்ளது.
அமைச்சர் உதயகுமாரின் கோரிக்கையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரித்துள்ளார். மேலும் அவர், மதுரையை முதல் தலைநகரமாகவும் திருச்சியை 2வது தலைநகராகவும் ஆக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர்-ன் கனவு. ஆனால், கருணாநிதி அதை எதிர்த்தார்” என்று கூறி விவாதத்தை சூடாக்கினார்.
அதே போல, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழகத்திற்கு ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தலைநகரம் உருவாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணசாமி, “8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மாநிலமான தமிழ்நாட்டிற்கு மதுரையை மையமாக வைத்து மற்றொரு தலைநகர் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. 2011-ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், ஆண்டிற்கு இருமுறையாவது மதுரையை மையமாக வைத்து சட்டமன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அது சட்டமன்ற நடவடிக்கை பதிவேடுகளில் பதிவாகியிருப்பதை அனைவரும் காணலாம்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், “திருச்சியை மையமாகக் கொண்டு ஒரு தலைநகர் உருவானால், 15 மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றி இருக்கக் கூடிய பல பகுதிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். கோவையை மையமாகக் கொண்டு ஒரு தலைநகர் உருவானால் நீலகிரி சுற்றுலாத்தலமாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நூற்பாலையை அடிப்படையாக கொண்ட பல தொழில்கள் பெரும் வளர்ச்சி அடையும். திருச்சி தலைநகராக வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல, எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதே தமிழ்நாட்டின் தலைநகரையே திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார். ஆனால், எம்.ஜி.ஆர் அந்த கருத்தை முன்வைத்தார் என்பதற்காகவே ஒரு சில தலைவர்களும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக அது அப்பொழுது கைவிடப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசின் உயர் அதிகாரிகள் 2ம் தலைநகர் யோசனையை நிராகரிக்கின்றனர். “2வது தலைநகர் என்பது சரியானது இல்லை. இரண்டு தலைநகரங்களுக்கு இரண்டு செட் உள்கட்டமைப்புகள் இருப்பது நிதி ரீதியாக விவேகமானதல்ல. முழு செயலகத்தையும் ஆறு மாதங்களுக்கு வேறு தலைநகருக்கு மாற்றுவது சாத்தியமில்லை” என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றன. இருப்பினும், 2 தலைநகர் திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கமோ அல்லது அதிமுகவும் விரைவில் தெளிவுபடுத்தக்கூடும் என்று தெரிகிறது.
தொழில்கள், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி என பல முனைகளில் தென் மாவட்டங்களை உருவாக்க மதுரையை 2வது தலைநகராக்குவது உதவும் என்று 2வது தலைநகர் யோசனையை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 14 தென் மாவட்ட மக்கள் அனுகும் வகையில் உள்ளது. மதுராஇ தோப்பூரில் வரவிருக்கும் எய்ம்ஸ் தலைநகரின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.
ஒரு கோடி மக்கள் தொகையுடன் மேலும் விரிவடைந்துவரும் சென்னை நிர்வாகம் சமாளிக்க போராடுகிறது. நீதித்துறையின் பரவலாக்கம் சாதாரண மனிதர்களுக்கு உடனடி நீதியைப் பெற உதவுகிறது என்று அமைச்சர் உதயகுமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இரண்டு தலைநகரங்கள் இருக்கும்போது, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. சலுகைகள் வழங்கப்பட்டாலும் இங்கு முதலீடுகளை ஈர்ப்பது உண்மையில் ஒரு சவாலாகும். அதனால், தலைநகர் என்ற சிறப்பு அந்தஸ்து முதலீடுகளை ஈர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக தரப்பு, அதிமுக அமைச்சர்களின் 2ம் தலைநகர் கோரிக்கையை சரியில்லை என்று நிராகரித்துள்ளது. மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “2016 ஆம் ஆண்டில் எனது முதல் உரையில், மதுரை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும்படி நான் ஜெயலலிதாவிடம் கேட்டேன். அவரும் உறுதி அளித்தார். நிலத்தடி வடிகால் அமைப்பை நிறைவு செய்தல், போக்குவரத்து சிக்கல்களை சரிசெய்து மீட்டமைத்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நான் செய்தேன். கழிவுநீர் மற்றும் குப்பைகளால் கொட்டப்படும் வகையை மீட்டமைக்க வேண்டும் என்றேன். அவர்கள் தங்களுடைய தலைவரின் பார்வையை நிறைவேற்றவில்லை எனது வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கவில்லை” என்று ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மதுரையை 2-ம் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் திருச்சியில் உள்ளவர்கள் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த ஒரு அரசியல் கோரிக்கையும் அது மக்களின் அவசியமான கோரிக்கையாக மாறும்போது அரசு அதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி, இந்த 2வது தலைநகர் கோரிக்கையும் மக்கள் கோரிக்கையாக மாறினால் நிதி ரிதியான பிரச்னைகளை எல்லாம் தாண்டி அரசு பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.