சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல்லில் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்ததன் காரணமாக, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.
சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், மார்ச் 5 ஆம் தேதி கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட மொத்தம் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இன்று, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்தார். இதில், முதலாவது குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையுடன் சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
யுவராஜுன் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும், குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறுகையில், "கோகுல்ராஜ் திட்டமிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். முதலில் தற்கொலை வழக்காக கருதப்பட்ட நிலையில், உடற்கூராய்வுக்கு பின்பே படுகொலை என தெரிய வந்தது. யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளும் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கைதட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
தீர்ப்பு குறித்து கோகுல்ராஜ் தாய் சித்ரா பேசுகையில், "நீதிபதி வழங்கிய தீர்ப்பு இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். என் மகனின் நிலை யாருக்கும் வரக்கூடாது.
ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கித்தந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கு நன்றி. விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.