யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தங்கி இருந்த போதுதான் கடந்த மே மாதம் கைது செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கியதாகவும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த கஞ்சா வழக்கிற்காக போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்ட போதும், அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் நடந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“