மதுரை மாநகரம் எங்கும் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர், தற்போது மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த போஸ்டரில் ஜூன் 3 பிறந்தநாள் விழா, தமிழகத்தின் வெற்றி தலைவருக்கு சமர்ப்பணம் என்று, கலைஞர் கருணாநிதி புகைப்படம் நடுவிலும், வலது புறம் ஸ்டாலின் மற்றும் அழகிரியும் இடது புறம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதியும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அழகிரியின் முக்கிய ஆதரவாளரான் முபாரக் மந்திரியால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் முபாரக் மந்திரி மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் சிலரது புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.
அழகிரியின் அதிதீவிர ஆதரவாளரான முபாரக் மந்திரி, இப்படியொரு போஸ்டர் ஒட்டியது, அழகிரி ஆதரவாளர்களிடையேயும் மற்றும் மதுரை திமுகவினரிடையேயும் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
நாளை ஜூன் 3 தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். இதனையொட்டி தேர்தல் வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிக்கும் விதமாக, தமிழகத்தின் வெற்றி தலைவருக்கு சமர்ப்பணம் என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திமுக தேர்தலில் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்றதற்கு அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அண்ணன் தம்பி சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை. இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், அண்ணன் தம்பிகளான அழகிரி, ஸ்டாலினையும் மற்றும் உதயநிதி, துரை தயாநிதியையும் போஸ்டரில் இணைத்துள்ளது திமுகவினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முபாரக் மந்திரி நீண்டகாலமாக அழகிரியுடன் இருப்பவர். எனவே அவர், பொதுவாக அழகிரியின் மனநிலை என்ன என்பது தெரியாமல் எதையும் செய்ய மாட்டார். இதனால், அவர் அழகிரியின் மனநிலையை பிரதிபலித்துள்ளாரா அல்லது அழகிரியே இவ்வாறு செய்ய சொன்னாரா என்ற கேள்வி திமுகவினரிடையே எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil