/indian-express-tamil/media/media_files/2025/08/13/madurai-tax-scam-husband-arrested-mayor-indrani-to-step-down-tamil-news-2025-08-13-15-43-59.jpg)
மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாநகராட்சி பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் உள்ளிட்ட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, வரிவிதிப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜயலட் மற்றும் 96-வது வார்டு கவுன்சிலர் கண்ணன், செந்தில்பாண் ஆகியோர் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானனர். கிடுக்கிப்பிடி விசாரணையின் பிறகு கண்ணன் மற்றும் செந்தில்பாண் கைது செய்யப்பட்டனர்.
கண்ணனிடம் நடைபெற்ற மேல்விசாரணையில், மேயரின் கணவர், 3-வது மண்டலத் தலைவரின் கணவர், தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், 3-வது மண்டலத்தில் பணியாற்றிய முன்னாள் உதவி கமிஷனர் சுரேஷ்குமாரும் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அழைத்து வந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீசார் விசாரிக்கத் தீர்மானித்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து சென்னையில் முன்ஜாமீன் பெற முயன்றதாகத் தகவல் வெளியாகியது. இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று நேற்று இரவு பொன்வசந்தை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இதயத்தில் மாறுதல்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அவர் இன்று காலை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுவதால், இன்னும் பலர் சிக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.