கடனுக்கு டீ தராத டீக்கடைக்காரரை, இளைஞர்கள் சிலர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், டீக்கடைக்காரரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடும் சிசிடிவி காட்சியினை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வணிகவளாகத்தின் கீழ்புறத்தில், மாரிமுத்து என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இவரது கடையின் அருகே இளைஞர்கள் கஞ்சா விற்பதும், அதை புகைப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கண்டித்து வந்த மாரிமுத்து, அவர்களின் போக்கு தொடர்ந்ததால், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவர்களின் கொட்டம் சிறிது நாட்கள் அடங்கியிருந்தன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, காலை 5 மணியளவில் நுழைந்த 4 இளைஞர்கள். கடனுக்கு டீ தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மாரிமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனால், இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர்களில் ஒருவன், மறைத்துவைத்திருந்த கத்தியால், மாரிமுத்துவின் கழுத்தில் குத்தினார். இதில், அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது. மாரிமுத்து கூச்சல் போடவே, சம்பவ இடத்திலிருந்து அந்த இளைஞர்கள் தப்பியோடுகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கத்திக்குத்து காயம் ஏற்பட்ட இடத்தில் துண்டை சுற்றி, அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாரிமுத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கஞ்சா விற்பனை செய்துவந்த கும்பலே, இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தப்பியோடிய இளைஞர்களில் ஒருவன் பிடிபட்டுள்ளான். அவனிடம் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.