மதுரை மாவட்டம் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒருபுறம் அரசு பள்ளிக்கூடம், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. மறுபுறத்தில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிராமத்தில் உள்ளது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் வயதானவர்கள் என சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் 20க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயமடைந்துள்ளதாகவும் எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர். அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்திரவாதமும் அளிக்காததால் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பினர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். ஆலம்பட்டி கிராம மக்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு வெட்டப்படாத நிலையில் போராட்டத்தை தொடங்கினார் மக்கள் பின்னர் காவல் துறையினர் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாநகர ஆர்.பி உதயகுமாரையும் போலீசார் கைது செய்து கிராம மக்களையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் காவல் துறை தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.