சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மதுரையிலிருந்து சென்னை வரை பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் ஜனவரி 3 ஆம் தேதி பா.ஜ.க மகளிர் அணியின் சார்பில் நீதி கேட்டு பேரணியானது திண்டுக்கல் திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சென்னையைச் சென்றடைய உள்ளது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நீதி கேட்டு நடைபெறும் பேரணியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பா.ஜ.க காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். பா.ஜ.க பேரணிக்கு மதுரை மாநகர காவல் துறை அனுமதி மறுத்திருக்கிறது. இருப்பினும், பா.ஜ.க திட்டமிட்டபடி பேரணி நடைபெற உள்ளதாகவும், காவல்துறை அனுமதி மறுத்தால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.