லக்னோவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ஆன்மீக சுற்றுலா ரயில் அதிகாலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது.
இந்த ரயில், மதுரை போடி லைன் பகுதியில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா வந்த பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்காக தடையை மீறி ரயிலில் கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை, ரயில் பெட்டிக்குள் சில பயணிகள் டீ தயாரித்த போது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் ஏறிவிடுவார்கள் என பெட்டியை பூட்டி வைத்திருந்ததால், தீப்பற்றியபோது வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தற்போது, தீயை அணைக்கும் பணி முழுமையடைந்து உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.
இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர். இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தது.
அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், மதுரை ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தனர். அமைச்சர் பி. மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விபரங்களைக் கேட்டு அறிந்தார்.
இதனிடையே இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயங்களுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil