/indian-express-tamil/media/media_files/2025/08/21/tvk-vijay-speech-1-2025-08-21-17-44-39.jpg)
த.வெ.க.விற்கு அடிமை கூட்டணி தேவையில்ல; தி.மு.க.தான் ஒரே போட்டி: மதுரையில் விஜய் பேச்சு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டிற்குப் பிறகு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 506 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மாநாட்டுத் திடலில், தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.மாநாட்டு மேடைக்கு விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா, தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் நாட்டுப்புற இசையுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த 300 அடி நீள ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
தொண்டர்கள் வீசிய தமிழக வெற்றிக் கழக துண்டை எடுத்து அணிந்து கொண்டு ரேம்ப் வாக் சென்ற விஜய், தொடர்ந்து 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உரையாற்றினார். தொடர்ந்து, 2-வது மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடல் ஒலிபரப்பட்டது. இந்தப் பாடலானது, விஜய்யின் குரலில் உருவாகியுள்ள நிலையில், ”உங்க விஜய் வரேன்!”, “பெரியாரின் பேரன் வரான்”, “எளியவர்களின் குரல்” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
“சிங்கம் எப்போதும் தனித்துவமானாது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால் அந்த சத்தத்தில் 8 கி.மீ. வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கும் மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளைதான் குறிவைத்து தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் 4 பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் தண்ணி காட்டும். எப்போதும் தனது தனித்தன்மையை இழக்காது.
சிங்கத்தைப் பற்றி பேசிவிட்டு நமது சிங்கக் குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், அம்மாக்கள், அக்கா, தங்கைகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உயிர் வணக்கம். சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான்.
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் சமரசம் இல்லை. நமது கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மகத்தான மக்கள் படை. பா.ஜ.க.வுடன் மறைமுக கூட்டணிக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு தரப்படும்.
2026-ல் இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டியே, ஒன்று தி.மு.க. மற்றொன்று த.வெ.க. 1967, 1977-ல் நடந்தது போல் 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும். எதிர்காலம் வரும்.. என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்... வெற்று விளம்பர மாடல் திமுக-பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் வெரி ராங்க் அங்கிள்.
பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா? அல்லது இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. நமது தமிழ்நாட்டு மீனவர்கள் சுமார் 800 பேர் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அந்த தேர்வு தேவையில்லை என்று அறிவித்து விடுங்கள்.
மற்றவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போவார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரின் விட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒருவர் வேட்பாளராக இருப்பார், அவரும் நானும் வேறு இல்லை. என்னை சகோதரனாக நினைக்கும் அனைத்து தாய்மார்களின் குழந்தைக்கும் நான் தாய் மாமன் தான். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
மற்றவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போவார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரின் விட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒருவர் வேட்பாளராக இருப்பார், அவரும் நானும் வேறு இல்லை. நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வந்ததற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். என் கடன் இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே. தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். உங்களுக்காக பேச, உங்களுடன் நிற்க, உங்களுக்கு சேவை செய்ய உங்கள் விஜய் நான் வரேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.” என்றார்.
இதனிடையே, விஜய் பேசும்போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார். இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவித்துவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டார். இதைக்கேட்ட தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், அடுத்த நொடியே, அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு தனது பெயரை விஜய் கூறியதும் உண்மையாகவே, போட்டியிடும் தொகுதியை விஜய் அறிவித்துவிட்டதாக நினைத்த தொண்டர்களுக்கு சிறிது நேரம் கழித்துதான் விஜய் பேச்சின் சராம்சம் புரிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.