தமிழக அரசியலையும் மதுரையையும் பிரிக்கவே முடியாது: இதோ சில வரலாற்று சாட்சியங்கள்

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகிய அரசியல் தலைவர்கள் மதுரையிலிருந்துதான் தங்கள் அரசியல் வாழ்க்கையை துவங்கி ஜெயித்துக் காண்பித்திருக்கின்றனர்

கமல்ஹாசன் மதுரையிலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதை அரசியல் நோக்கர்கள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகிய அரசியல் தலைவர்கள் மதுரையிலிருந்துதான் தங்கள் அரசியல் வாழ்க்கையை துவங்கியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, கமலின் இந்த பயணம் வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு முன்பு, மதுரை மாவட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்:

1950-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் மன்றம் மதுரையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1960-களில், ஆர்.எம்.வீரப்பன் அனைத்து ரசிகர் மன்றங்களையும் இணைத்து, எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என ஒன்று சேர்த்தார். ஆர்.எம்.வீரப்பன் பின்னாளில் எம்ஜிஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு, எம்ஜிஆர் ரசிகர் மன்றம், அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கமாக மாற்றப்பட்டது.

1973-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து மாயத்தேவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை மாவட்டத்துடன் இணைந்த திண்டுக்கல் தொகுதியிலிருந்து, அதிமுக சார்பாக மாயத்தேவர் வெற்றிபெற்றது, புதிதாக துவங்கப்பட்ட அதிமுகவுக்கு பெருமையை சேர்த்தது.

விஜயகாந்த்:

மதுரை மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், தேமுதிகவை மதுரையில் தான் துவக்கினார். மிக குறுகிய காலத்திலேயே தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியாக அமரும் அளவுக்கு அரசியலில் வெற்றிபெற்றார் விஜயகாந்த். ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close