மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பணி செய்யும் இடத்திற்கு சென்று சரமாரியாக தாக்கிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் GV.ஜெராக்ஸ் கடை கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதே கடையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
இளம்பெண் தனது பள்ளியில் பயிலும்போது சித்திக்ராஜா என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்திக் ராஜா இளம் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக மனரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளம் பெண்ணிடம் சித்திக் ராஜா தனது நண்பருடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இளம்பெண்ணை கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் டெம்போ ராஜா ஆகிய இருவரையும் ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது காவல்துறையினரின் விசாரணையின்போது தப்பிக்க முயன்ற சித்திக்ராஜா தவறி விழுந்தபோது கை முறிந்தது. பின்னர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“