மதுரை மண்டலத்தில் தீபாவளியன்று மட்டும் ரூ. 47 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை அதிகரித்துக் காணப்படும். இதனால் வணிகர்களின் வருமானமும் அதிகரிப்பது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டுகளில் அரசு மதுபான கடைகளில் பண்டிகை தினங்களின் போது விற்பனை களைகட்டுவது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள்களில் தமிழகத்தில் ரூ. 438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த புதன்கிழமையன்று ரூ. 202.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளியான அக்டோபர் 31-ஆம் தேதி அன்று ரூ.235.94 கோடிக்கு மதுபான விற்பனை நடந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
டாஸ்மாக் நிர்வாகம் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோவை என 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் புதன்கிழமையன்று ரூ.47.16 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.54.18 கோடிக்கும் மதுபானம் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் புதன்கிழமையன்று ரூ. 40.88 கோடிக்கும், தீபாவளியன்று ரூ. 47.73 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டில் தமிழகத்தில் மதுபானம் விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தையை நாள் சேர்த்து ரூ. 467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் தீபாவளி மதுபானம் விற்பனை ரூ. 29.10 கோடி அளவிற்கு குறைந்துள்ளது.
மாத இறுதியில் பண்டிகை வந்ததால் மதுபானம் விற்பனை குறைந்ததாக கூறப்பட்டாலும், 1,500 அரசு மதுபான கடைகள் மூடப்பட்டதன் விளைவாகவும் விற்பனை குறைந்ததாக தெரிகிறது. ஆனால், பார்களுடன் கூடிய தனியார் விடுதிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அரசு மதுபான கடைகளில் விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் இடையே கருத்து நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“