சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கொண்டுவருவதற்கான காரணம், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்கள் நகருக்குள் வராத வண்ணம் போக்குவரத்து தடையின்றி செல்லவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போதே இத்திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அப்போது இதன் பணிகள் 15 சதவீதம் முடிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தான் 2011 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூவம் ஆற்றின் வழியே அமைக்க திட்டமிட்டு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் தான், இந்த பறக்கும் சாலை திட்டத்தால் கூவம் நதி பாதிக்கப்படும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவலாம் என்று இந்த திட்டத்திற்கு தடை ஏற்படுத்தினார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிகள் விரைவில் துவங்கும் என்றும் அறிவிக்கப்பப்பட்டது.
2022 இல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு, மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.5,855 கோடி செலவில், 20.56 கிலோமீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய மாநிலங்களில் முதல்முறையாக இரு அடுக்கு சாலையாக அமைய உள்ளது.
கட்டுமான பணிகளை தொடங்க கடல் ஒழுங்குமுறை, சுற்றுச் சூழல் துறை மற்றும் ரயில்வே துறையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலையின் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.